''3 மாதம் மூட்டை தூக்கி சம்பாதித்தது'' - கல்லூரி மாணவரிடம் இருந்து 23 ஆயிரம் திருட்டு
ராசிபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவரிடம் நூதன முறையில் பேசி வங்கி கணக்கில் இருந்து 23 ஆயிரம் பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், ராமசாமி தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவர் தனியார் கல்லூரியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் மனோஜ்(19). சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், மாணவர் மனோஜ் மத்திய அரசின் வல்லபாய் பட்டேல் கல்வி உதவி தொகைகக்கு விண்ணப்பித்திருந்தார். இதைத்தொடர்ந்து மனோஜ்க்கு தொலைபேசியில் பேசிய மர்மநபர் ஒருவர் கல்வி தொகை குறித்து விபரம் கேட்பதாக பேசி ஏடிஎம் எண்களை வாங்கி அதிலிருந்த ரூ.23 ஆயிரத்தை நூதன முறையில் திருடி உள்ளார்.
பின்னர் பணம் திருட்டு குறித்து தெரிந்து அதிர்ச்சி அடைந்த மாணவர் மனோஜ் மீண்டும் அந்த செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மாணவர் மனோஜ் கூறுகையில் “காலர்ஷிப் எனக்கூறியதால் நம்பர் கொடுத்தேன். கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்துவதற்காக நானும் எனது தந்தையும் கடந்த 3 மாதங்களாக கஷ்டப்பட்டு சேர்த்த பணம் அது. மூட்டை தூக்கி சம்பாதித்தது. இப்போது கல்விக் கட்டணம் செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எப்படியாவது எனது பணத்தை மீட்டுத்தர போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கண்ணீர் மல்க கூறினார்.