ராகுலாக சென்றவர் சுமித்ராவாக திரும்பினார்: கதறி அழுத தாய்!
வீட்டை விட்டு வெளியேறியவர் திருநங்கையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை ஏற்ற நீதிமன்றம் ஆட்கொணர்வு மனுவை முடித்துவைத்தது. ஆனால் காணாமல் போனவர் திருநங்கையாக திரும்பி வந்ததை கண்டு தாய் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
சென்னை கொரட்டூரை சேர்ந்த கலைவாணியின் மகன் ராகுல். பிளஸ் டூ முடித்துள்ள ராகுல், வேலைக்கு போவதாகக் கூறிவிட்டு கடந்த ஜனவரி மாதம் வீட்டை விட்டு சிவகங்கை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். மகனும் சம்பாதித்து வீட்டின் சுமையை தீர்ப்பான் என்ற நம்பிக்கையில் கலைவாணி காத்திருந்தார். ஆனால் மகன் வீடு திரும்பவில்லை. அதோடு மட்டுமில்லாமல் தாய் கலைவாணியிடம் எந்தத் தொடர்பும் இல்லாமல் ராகுல் இருந்திருக்கிறார். இதனால் பதட்டம் அடைந்த கலைவாணி என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி, இறுதியாக மகன் ராகுலை பார்க்க சிவகங்கையே சென்றிருக்கிறார். ஆனால் அங்கு மகன் ராகுலை கண்ட கலைவாணிக்கு காத்திருந்தது அதிர்ச்சி. பேண்ட் சட்டையோடு வீட்டை விட்டு வேலைக்குச் சென்ற மகன், புடவையும் ஜாக்கெட்டுமாக பெண்ணாக மாறியிருந்தார். அதோடு மட்டுமில்லாமல் தனது பெயரையும் சுமித்ரா என மாற்றிவிட்டதாகவும் ராகுல் கூறினார். மேலும் கலைவாணியுடன் செல்லவும் திருநங்கை சுமித்ரா மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதனையடுத்து தனது மகனை மீட்டுத் தரக்கோரி கலைவாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. சுமித்ராவாக மாறியிருந்த ராகுல் நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, “சென்னையில் இருந்த வரை தன்னுடைய மகன் திருநங்கையாக மாறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. சாத்தியங்களும் இல்லை. ஆனால் சிவகங்கையில் உள்ள சிலர் தன்னுடைய மகனுக்கு ஊசி மற்றும் மருந்து மூலமாக திருநங்கையாக மாற்றிவிட்டதாக” கலைவாணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இணையதளங்களை பார்த்து தன்னுடைய சொந்த விருப்பத்திலேயே தான் திருநங்கையாக மாறியதாக தெரிவித்த ராகுல், தன்னுடன் பெயரை சுமித்ரா என மாற்றிக்கொண்டதாகவும் தாயுடன் செல்ல சம்மதம் எனவும் நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், திருநங்கை சுமித்ராவுக்கு அறிவுரைகளை வழங்கினார். ‘பிச்சை எடுக்கக்கூடாது. படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோரை கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என அறிவுரையை வழங்கினார். திருநங்கை சுமித்ராவும் அதனை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
தனது மகனுக்காக காத்திருந்த கலைவாணி, தனது மகன் திருநங்கையாக மாறி வருவதை கண்டதும் கலங்கி அழுதது.. தனது தாய் அழுததை கண்டதும் திருநங்கை சுமித்ராவும் கண் கலங்கியது... காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.