ஒரு மணமகன் 2 மணமகள்: விருதுநகரில் நடந்தது என்ன?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இரு பெண்களை ஒருவர் மணக்கிறார் என்ற தகவல் பரவிய நிலையில், அவர் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மறவர்பெருங்குடி ஊராட்சிக்கு உட்பட்டது ம.வெள்ளையாபுரம் கிராமம். இக்கிராமத்தில் இராமமூர்த்தி என்பவர் சிறு வயதில் தாய், தந்தையை இழந்து உடன் பிறந்த இரு சகோதரிகளின் அரவணைப்பில் வளர்ந்தார். இவர் கிராமத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமண வயதானதால் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. இவர் தனது சகோதரியின் வீட்டிலே வளர்ந்ததால் சகோதரியின் மகளுடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன.
மற்றொரு சகோதரியின் மகள் உடல்நிலை சரியில்லாதவர். இவரையும் தங்களது தம்பிக்கு திருமணம் முடித்து வைக்கலாம் என எண்ணி இரு சகோதரிகளின் மகள்களை தனது தாய்மாமனான இராமமூர்த்திக்கு திருமணம் செய்து கொடுக்க இரு சகோதரிகளும் சம்மதித்து, திருமண அழைப்பிதழ் அடித்தனர். அதில் ஒரு மணமகன் இரு மணமகள் பெயர் அச்சடிக்கப்பட்டு, இன்று 04.09.17 திருமணம் என உறவினருக்கு கொடுக்கப்பட்டது. இந்த வினோதமான அழைப்பிதழ் கடந்த ஐந்து நாட்களாக சமூக வலைதளங்களான முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் ஆகியவைகளில் ஒரு மணமகன் தனது இரண்டு சகோதரியின் மகள்களை ரேணுகாதேவி, காயத்திரியை ஒரே மணமேடையில் கரம்பிடிக்கிறார் என வேகமாக பரவிவந்தது. இதில் சில பேர் கிண்டலாகவும், சமூக ஆர்வலர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலையதளங்களில் பரவும் திருமண அழைப்பிதழை கண்ட மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விசாரிக்க உத்தரவிட்டது.
ஆனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருமண வீட்டார் மாவட்ட ஆட்சியர் மற்றும் சமூக அலுவலரிடம் சென்று திருமண அழைப்பிதழில் இரண்டு பெயர்கள் தவறுதலாக அச்சிடப்பட்டுவிட்டது. இராமமூர்த்தி ரேணுகாதேவி கொண்ட புதிய திருமண அழைப்பிதலை காண்பித்து மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து ம.வெள்ளையாபுரம் கிராமத்தை தொடர்ந்து சமூகநலத்துறை அதிகாரிகள் கவனித்து வந்தனர். இந்த பரபரப்புகளை கடந்து இன்று காலை கிராம மக்கள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ரேணுகாதேவியை திருமணம் செய்துகொண்டார் இராமமூர்த்தி.