மனைவியை பிரிந்தவர் திருநங்கையை திருமணம் செய்தது டிக்டாக்கில் அம்பலம்
3 ஆண்டுகளுக்கு முன் காதல் மனைவியை பிரிந்து சென்ற கணவர் திருநங்கையை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திவந்தது டிக்டாக் வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.விழுப்புரம் அடுத்த வழுதாரெட்டியைச் சேர்ந்த ஜெயப்பிரதா, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு வீட்டைவிட்டுச் சென்ற சுரேஷ் அதன்பின் திரும்பவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை.
இதுகுறித்து ஜெயப்பிரதா விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சுரேஷை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் அவரைப் போல் இருப்பவர் திருநங்கையுடன் ஜோடியாக டிக்டாக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருப்பது தெரியவந்தது.
(மனைவியுடன் சுரேஷ்)
இதுகுறித்து ஜெயப்பிரதா காவல்துறையினரிடம் தெரிவித்தார். விசாரணையில் டிக்டாக்கில் திருநங்கையுடன் வீடியோ பதிவிட்டது சுரேஷ்தான் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், விழுப்புரம் திருநங்கை அமைப்பை சேர்ந்த திருநங்கைகளிடம் விசாரித்தனர். அதில் வீடியோவில் இருக்கும் திருநங்கை ஓசூர் பகுதியில் வசிப்பதை கண்டறிந்தனர். போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டபோது, சுரேஷ் அந்தத் திருநங்கையை திருமணம் செய்துக் கொண்டு தனிக்குடித்தனமாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சுரேஷை அங்கு இருந்து மீட்டு வந்த காவல்துறையினர், மனைவி ஜெயபிரதாவிடம் சேர்த்து வைத்தார்கள். தொடர்ந்து சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைசெய்தபோது திருநங்கை ஒருவருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக அவரைத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. மனைவி இரண்டு பெண் குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற கணவர், திருநங்கையை திருமணம் செய்து கொண்டு ஓசூரில் குடித்தனம் செய்து வந்தது விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.