ஈரோடு: பாம்பு கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜோதிடரை நாடிய நபருக்கு நேர்ந்த பரிதாபம்

ஈரோடு: பாம்பு கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜோதிடரை நாடிய நபருக்கு நேர்ந்த பரிதாபம்
ஈரோடு: பாம்பு கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜோதிடரை நாடிய நபருக்கு நேர்ந்த பரிதாபம்

தெய்வ நம்பிக்கை என்ற பெயரில் மூட நம்பிக்கையால் தங்களை தாங்களே வருத்திக்கொள்ளுதல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு போலீசாரிடம் மாட்டிக்கொள்ளுதல் போன்றவை குறித்து பல செய்திகளை நாம் பார்க்கிறோம். அந்த வரிசையில் பாம்பு கனவுகள் வராமல் தடுக்க ஜோதிடரின் பேச்சைக் கேட்டு, பாம்புக்கடி வாங்கி நாக்கை இழந்துள்ளார் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு அடிக்கடி பாம்பு கடிப்பது போல கனவுகள் வந்து தொல்லை கொடுத்தால் பல இரவுகள் தூங்காமல் அவஸ்தைப்பட்டுள்ளார். தனது பாம்பு கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த ராஜா, ஜோதிடரை நாடியுள்ளார். அவர், பாம்புக்கு பூஜை செய்தால் இதுபோன்ற கனவுகள் வருவதை தடுக்கலாம் என ஆலோசனை கூறியதுடன், பாம்பு புற்று உள்ள ஒரு கோவிலுக்கும் வழிசொல்லி அனுப்பியுள்ளார்.

ஜோதிடரின் பேச்சை நம்பி புற்று கோவிலுக்குச் சென்ற ராஜாவிடம், அந்த கோவில் பூசாரின் அவர் பங்குக்கு சில சுத்திகரிப்புகளை செய்யச்சொல்லியதுடன், பாம்பு புற்றின் வாயில் தனக்கு நாக்கை நீட்டிக் காட்டச் சொல்லியுள்ளார். கனவு தொல்லை நீங்கினால் போதும் என, பூசாரியின் பேச்சை நம்பிய ராஜாவும், கட்டுவிரியன் பாம்பின் புற்றின் அருகே சென்று நாக்கை காட்டியுள்ளார். சில நொடிகளில் புற்றின் உள்ளே இருந்த பாம்பு, ராஜாவின் நாக்கில் பட்டென கொத்தியுள்ளது.

இதனால் வலியில் துடித்த ராஜா, அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். ராஜாவுடன் சென்ற அவரது உறவினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பாம்பு கனவிலிருந்து விடுபட நினைத்த ராஜாவின் நாக்கானது விஷம் பாய்ந்ததால் அறுவைச்கிச்சை செய்யப்பட்டு அகற்றப்பட்டது.

இதுகுறித்து ராஜாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறுகையில், ”நவம்பர் 18ஆம் தேதி வாயிலிருந்து ரத்தம் கொட்டிய நிலையில்தான் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். நாக்கிலுள்ள திசுக்களில் பாம்பின் கொடிய விஷம் ஏறியதால் நாக்கை அகற்றவேண்டிய நிலை ஏற்பட்டது. நாக்கை அகற்றிய போதிலும் ராஜாவின் உயிரைக் காப்பாற்ற நான்கு நாட்கள் போராட வேண்டியிருந்தது” என்று கூறியுள்ளார்.

மக்கள் தெய்வ நம்பிக்கை என்ற பெயரில், இதுபோன்ற மூடநம்பிக்கையான விஷயங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com