பணம் தர மறுத்ததால் தாயை உலக்கையால் அடித்துக் கொன்ற மகன்..!
உசிலம்பட்டி அருகே பணம் தர மறுத்த தாயை, உலக்கையால் அடித்து மகன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரைச் சேர்ந்தவர் கொள்ளமுத்து. இவரது மனைவி ஜோதியம்மாள். இந்தத் தம்பதிக்கு முத்துப்பாண்டி, ஈஸ்வரன் என்ற இரு மகன்களும், ரேவதி என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் மூவருக்கும் திருமணமான சூழலில் கணவரும் இறந்துவிடவே ஜோதியம்மாள் மட்டும் அரசு ஓய்வூதிய பணம் பெற்றுக் கொண்டு தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மகன்களில் ஒருவரான முத்துப்பாண்டிக்கு ஏற்பட்டுள்ள கடன் பிரச்சனையை சமாளிக்க தாய் ஜோதியம்மாளிடம் இன்று பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தாய் ஜோதியம்மாள் பணம் தரமறுத்த நிலையில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி அருகே இருந்த உலக்கையால் தாயை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த ஜோதியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தார். சம்பவமறிந்து விரைந்து சென்ற சேடபட்டி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் மகன் முத்துப்பாண்டியைக் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

