செய்தியாளர்: K.கருப்பஞானியார்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அய்யனார் கோவில் செல்லும் சாலையில் உள்ள முடங்கியாற்று பாலத்தில் ஆண் தலை இருப்பதாக அந்த வழியாகச் சென்ற விவசாயிகள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பாலத்தின் கைப்பிடி சுவர் அருகே ஆண் தலை அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.
ஆனால், இறந்தவரின் மற்ற உடல் பாகங்கள் கிடைக்கவில்லை. உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் அளித்த போலீசார், அடையாளம் காண முயன்றனர். ஆனால், இறந்தவர் யார் என்பது குறித்து உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், கணபதிசுந்தர நாச்சியார்புரத்தைச் சேர்ந்த பூவையா என்பவர் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு மாயமாகியுள்ளார் என்ற தகவல் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. ஆகவே இறந்த நபர் பூவையாவாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் பூவையா என்பது உறுதி செய்யப்பட்டது.
அடுத்தடுத்த விசாரணைகளில், முன்பகை காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், தளபதி, ஈஸ்வரன் ஆகிய மூவர் இணைந்து வனப் பகுதிக்குள் வைத்து சுமார் மூன்று நாட்களுக்கு முன்பு பூவையாவை கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. தற்போது மூன்று நபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.