சிகிச்சைக்காக உதவிய சமூக வலைதளவாசிகள் - வசூலான பணத்தை நண்பனிடம் ஏமாந்த நபர்

சிகிச்சைக்காக உதவிய சமூக வலைதளவாசிகள் - வசூலான பணத்தை நண்பனிடம் ஏமாந்த நபர்

சிகிச்சைக்காக உதவிய சமூக வலைதளவாசிகள் - வசூலான பணத்தை நண்பனிடம் ஏமாந்த நபர்
Published on

வாலிபர் தனது மருத்துவ சிகிச்சைக்காக சமூக வலைதளங்கள் மூலம் சேகரித்த ரூ 2 லட்சம் பணத்தை, தனியார் மருத்துவமனை பெயரில் போலி பில் கொடுத்து நண்பன் பெனட் என்பவர் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. 

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் முருகன் (34). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தில் முருகனுக்கு முதுகு தண்டுவடத்தில் முறிவு ஏற்பட்டது. அவரது நெருங்கிய நண்பரான பெனட் என்பவரிடம் தனது நிலை குறித்து தெரிவித்துள்ளார். அத்துடன் தனது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பெனட் குமரி மாவட்டம் தேரேக்கால்புதூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதற்கு தரமான சிகிச்சை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்தாக கூறப்படுகிறது. 

(முருகன்) (ஏமாற்றப்பட்டவர் )

அத்துடன் தண்டுவட பிரச்சனை சரி செய்ய பல லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் பெனட் கூறியுள்ளார். கூலித் தொழிலாளியான முருகனுக்கு பல லட்சம் செலவு செய்யும் வசதி இல்லை. எனவே முருகன் தனது பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் சமூக வலைதளங்கள் மூலம் அவருடைய பிரச்சனை குறித்து வீடியோ பதிவிட்டு சிகிச்சை உதவுமாறு கேட்டுள்ளார். வங்கி கணக்கு எண் மற்றும் செல்போன் எண்ணை கூறி அந்த காணொளியில் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த பலர் அவரது வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தி உள்ளனர். இதன் மூலம் சுமார் 2 லட்சம் ரூபாய் அளவில் அவரது வங்கி கணக்கில் பணம் வந்துள்ளது. இதுகுறித்து அவரது நண்பரிடம் கூறி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது நண்பரும் சிகிச்சையை அனைத்தையும் தான் பார்த்துக் கொள்வதாக கூறி  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

சிகிச்சை செலவுக்காக மருத்துவமனை பில் ஆவணங்களை காட்டி அவ்வப்போது சிறிது சிறிதாக சுமார் 2 லட்சம் வரை முருகனிடம் இருந்து பெற்றுள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருந்துகள் வாங்குவதற்காக மருத்துவமனைக்கு தனியாக வந்துள்ளார். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம்  உங்கள் மருத்துவமனையில் அதிக பணம் வாங்குகிறார்கள் எனது சிகிச்சைக்கு ரூ 2 லட்சம் வரை செலவாகி விட்டது என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர் உங்கள் அறுவை சிகிச்சைக்கு எங்கள் மருத்துவமனையில் பணம் வாங்கவில்லை. அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உங்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மருந்து செலவுகளுக்காக மட்டும் ரூ 8000 மட்டுமே உங்களிடமிருந்து வாங்கினோம் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து முருகன் அவரது நண்பர் மருத்துவமனை பெயரில் வழங்கிய பில்களை கொடுத்துள்ளார்.அதை சோதித்த மருத்துவமனை நிர்வாகம் அனைத்து பில்களும் மருத்துவமனை பெயரில் போலியாக தயாரிக்கப்பட்டவை என்பதை முருகனிடம் கூறியுள்ளனர். 

இதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெனட்டை தேடிவருகின்றனர். மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல், சமூக வலைதளம் மூலம் சேகரித்த ரூ2 லட்சம் பணத்தை அவரது நண்பனே போலி பில் கொடுத்து ஏமாற்றி, பணத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com