சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம்: ஒருவர் கைது
ஈரோடு மாவட்டத்தில் ஒரு சமூகத்தினர் வழிபடும் சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகிரியை அடுத்துள்ள தொப்பபாளையத்தில் ஒரு சமூகத்தினரின் குலதெய்வக் கோயிலாக காளியண்ணன் கோயில் உள்ளது. இதன் முன்பகுதியில் 8 அடி உயரம் கொண்ட இரண்டு குலதெய்வ சாமி சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கோயிலுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், இரண்டு சாமி சிலைகளை உடைத்தனர்.
இந்த சம்பவம் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. சிலைகள் உடைக்கப்பட்ட தகவலறிந்து, இந்த சாமியை குலதெய்வமாக வழிபட்டு வரும் ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள், சிலைகளை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கோட்டைக்காட்டுவலசு கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.