திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது
ஆவடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர், அதுதொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் விட்டுவிடுவேன் என மிரட்டியதால் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர், பத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (25). இவர் எம்பிஏ பட்டதாரி. இவரும் ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியை சார்ந்த ஒரு பெண்ணும் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளனர். அப்போது, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். அச்சமயத்தில் ஜெயபிரகாஷ் திருமண ஆசை காட்டி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், இருவரும் ஒன்றாக இருந்தபோது, அதுதொடர்பான ஆபாச படங்களையும் ஜெயபிரகாஷ் தனது செல்போனில் எடுத்து வைத்து உள்ளார். இதற்கிடையில், சமீப காலமாக அந்தப் பெண், ஜெயபிரகாசிடம் பழகுவதை தவிர்ந்து விலகி சென்றுள்ளார். மேலும், அவர் வேலை செய்யும் இடத்தில், வேறு ஒருவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பெண்ணிடம் சென்ற ஜெயபிரகாஷ், உன்னை நான் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால் அதற்கு, இந்தப் பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ், நாம் காதலித்தபோது இருவரும் ஒன்றாக எடுத்த படங்களை உனது பெற்றோர், உறவினரிடம் காட்டுவேன் என்றும் மேலும், அப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ஜெயபிரகாஷ் மீது 376 சட்டவிதிகளின் படி மிரட்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய வழக்குகளில் கைது செய்தனர். பின்னர், போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சியில் பெண்களை அடித்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை ஆபாச வீடியோவாக பதிவு செய்து ஒரு கும்பல் மிரட்டிய சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், காதலித்த இளம்பெண்ணை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் அதுதொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் விட்டுவிடுவேன் என மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.