மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது
பொள்ளாச்சியில் பள்ளிச் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பொள்ளாச்சி, ஜோதி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் யாசின். இவர் அதே ஊரைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் பயிலும் 16 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறி, அவரைத் தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அம்மாணவி கர்ப்பமாக்கியதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் யாசினிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த யாசின், இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மாணவியை மிரட்டியதாக புகார் கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாது நின்ற அம்மாணவி, இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனையடுத்து யாசினை கைது செய்த மகளிர் காவல்நிலைய போலீசார், அவர் மீது போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

