பணமோசடி
பணமோசடிweb

திருவாரூர்: துணை முதலமைச்சரின் உதவியாளர் என கூறி மோசடி... ரூ.7,500-த்தை இழந்த நகராட்சி ஆணையர்!

துணை முதலமைச்சரின் உதவியாளர் என்று கூறி திருவாரூர் நகராட்சி ஆணையரிடம் ரூ.7500 பணத்தை ஜி-பே மூலம் பெற்று மோசடி செய்த சமையல்காரரை போலீசார் கைது செய்தனர்.
Published on

செய்தியாளர்: மாதவன்

திருவாரூர் நகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் தாமோதரன். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய எண் மூலம் அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய நபர், “நான் துணை முதலமைச்சரின் உதவியாளர் பேசுகிறேன். ஒரு இன்னோவா காரின் டயரை மாற்ற வேண்டும். உடனடியாக எனக்கு ரூ.5 ஆயிரம் பணம் அனுப்பி விடுங்கள்” என கூறியுள்ளார். தாமோதரன் நம்பி உடனே பணத்தை ஜி-பே மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

திருவாரூர் நகராட்சி
திருவாரூர் நகராட்சி

இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து “மெக்கானிக் கூடுதலாக ரூ.2,500 கேட்கிறார். உடனடியாக அனுப்புங்கள் இரவு ஜி-பே மூலம் மொத்த பணத்தையும் செலுத்தி விடுகிறேன்” என கூறியுள்ளார். இதையும் நம்பி மீண்டும் தாமோதரன் ரூ.2,500 பணத்தை ஜி-பே மூலம் செலுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து அடுத்த ஒரு மணி நேரம் கழித்து “ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்து உள்ளேன், கூடுதலாக ரூ.2,500 அனுப்புங்கள்; முழுமையாக ரூ.10 ஆயிரம் திருப்பி போட்டு விடுகிறேன்” என கேட்டுள்ளார்.

தொடர் மோசடியில் ஈடுபட்டுவந்த நபர்..

இதனால் சந்தேகம் அடைந்த நகராட்சி ஆணையர் தாமோதரன் இதுகுறித்து துணை முதலமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அப்படி ஒரு நபர் இல்லை என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து தாமோதரன் தான் ஏமாற்றப்பட்டது குறித்து திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் மொபைல் நம்பரை வைத்து மேற்கொண்ட விசாரணையில் போனில் பேசி ஏமாற்றிய நபர் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தை சரவணக்குமார் என்பது தெரியவந்தது. இதைவைத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சரவணக்குமார்
சரவணக்குமார்

விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் சமையல் வேலைக்காக சரவணக்குமார் சென்ற போது அங்கு உள்ள சில அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் பழக்கம் ஏற்பட்டதும், இதே பாணியில் இவர் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதற்காக இவர் மீது திருவண்ணாமலை, எட்டயபுரம், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் வழக்கு பதிவாகி இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணக்குமாரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com