அரசுப் பேருந்தை எரித்த போதை ஆசாமி..! - போலீஸார் தீவிர விசாரணை
அரியலூரில் அரசுப் பேருந்தை தீ வைத்து எரித்த போதை ஆசாமியை போலீஸார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள திருமழபாடிக்கு லால்குடியில் இருந்து அரசு பேருந்து இயக்கப்படுவது வழக்கம். இந்த பேருந்து கடைசி நடையாக திருமழபாடிக்கு இரவு 10.30 மணிக்கு மேல் செல்லும். பின்னர் அங்கே உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படும் பேருந்து, மீண்டும் அதிகாலையில் 6.30க்கு லால்குடிக்கு இயக்கப்படும். வழக்கம்போல, நேற்று இரவு திருமழபாடி கால்நடை மருத்துவமனை அருகே பேருந்து நிறுத்திவிட்டு, ஓட்டுநர் செந்தில்குமாரும், நடத்துனர் கிருஷ்ணகுமாரும் உறங்கியுள்ளனர்.
இரவு நேரத்தில் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனா் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். ஆனால் அரசு பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து திருமானூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சதாசிவம் என்பவா் போதையில் பேருந்துக்கு தீ வைத்தார் என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.