மாடியில் இருந்து மனைவியை தள்ளிய கொடூர கணவன்... ஆம்புலன்ஸில் வந்து புகார் கொடுத்த மனைவி!
செய்தியாளர் ச.குமரவேல்.
கூடுதல் வரதட்சணை கேட்டு மாடியில் இருந்து கணவர் தள்ளிவிட்டதால் இடுப்பு, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட பெண் ஒருவர், ஸ்டெக்சரில் வந்து ஆட்சியர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இந்நிலையில், தற்போது இப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்நெல்லி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி அப்துல் சலாமின் மகள் நர்கீசுக்கும், தமிழ்நாடு காவல்துறையில் உதவிக்காவல் ஆய்வாளராக கடலூரில் பணியாற்றி வரும் பாபா என்பவரின் மகன் காஜாரபீக்குக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
வரதட்சணையாக, 30 சவரன் நகை, இருசக்கர வாகனத்திற்கான பணம் உள்ளிட்டவற்றை கொடுத்ததாக நர்கீஸ் தரப்பினர் கூறுகின்றனர். இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு ஆம்புலன்ஸில் வந்த நர்கீஸ் அமர மற்றும் நடக்க முடியாத சூழலிலும் ஸ்டெக்சரில் இருந்தபடியே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கூடுதல் வரதட்சணை கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக மாமனார் வீட்டில் தொடர் துன்புறுத்தல் மற்றும் கொடுமைக்கு ஆளானதாக நர்கீஸ் தெரிவித்துள்ளார். தனியாக கணவருடன் தனிக்குடித்தனம் இருந்துவந்த நிலையில், அப்போதும் வரதட்சணை கொடுமைகள் தீராதவில்லை. தன்னை மொட்டை மாடியில் இருந்து கணவர் தள்ளிவிட்டதாக நர்கீஸ் தெரிவித்துள்ளார்.
வரதட்சணை கொடுமையை மறைத்து போன் பேசி கீழே விழுந்ததாக கூறும் கணவர், தான் ரத்தவெள்ளத்தில் இருந்தபோதும் உதவவில்லை என்றும், நர்கீஸ் வேதனையுடன் கூறினார். அரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் நர்கீஸ் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், காவல்துறை மற்றும் சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் கூறினார். கீழே விழுந்ததில் பெண்ணுக்கு இடுப்பு, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டநிலையில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காஜாரபீக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.