தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள மாலிக் பெரோஸ்கான் இன்று பொறுப்பேற்றார்.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காலியாக இருந்த மாநிலத் தேர்தல் ஆணையர் பதவிக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான மாலிக் பெரோஸ்கானை தமிழக அரசு நியமித்துள்ளது. மாலிக் பெரோஸ்கான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பு வகித்தவர். அரசுத்துறையில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்த மாலிக் பெரோஸ்கான், ஓய்வு பெறுவதற்கு முன்னர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் ஆணையராக இருந்தவர். ஏற்கனவே மாநிலத் தேர்தல் ஆணையராக இருந்த சீதாராமன், கடந்த மார்ச் மாதம் ஓய்வுபெற்ற நிலையில், இன்று காலை மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் புதிய ஆணையராக மாலிக் பெரோஸ்கான் பொறுப்பேற்றார். வரும் மே மாதத்திற்குள் உள்ளட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே மாலிக் பெரோஸ்கானுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிப்பதே சவாலான முதல் பணியாக இருக்கும்.