“40 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் தனித்துப்போட்டி” - கமல்ஹாசன்
மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “எங்கள் கைகள் கரை படிந்து விடக்கூடாது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நாங்கள் கரை படியாமல் இருக்க வேண்டும் என்றுதான் கூறுகிறேனே தவிர, மற்றவர்கள் கரை படிந்தவர்கள் என்று கூறவில்லை. எனவே மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப்போட்டியிடும். அதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம்.
நான் எப்போது தேர்தலில் போட்டியிடுவேன் என்பதை இப்போது சொல்ல முடியாது. கட்சி நிர்வாகிகள் மக்களிடத்தில் வரும் செய்திகளை எங்களிடம் தெரிவித்துள்ளனர். நான் தேர்தலைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன், அமைச்சர் ஜெயக்குமார் வெளுப்பதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். இரண்டும் வேறுவேறு வேலை” என்றார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பல கட்சிகளும் தங்கள் கூட்டணி குறித்து பேசி வருகின்றன. இதனால் தமிழக அரசியல் களம் மட்டுமின்றி, இந்திய அரசியல் களமும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் தங்கள் கட்சி நிலைப்பாட்டை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.