‘தேவையற்ற அழைப்பு.. காரணமற்ற விசாரணை.. நம்மவருக்கு சம்மன்’ - மநீம நிர்வாகி ட்வீட்
இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது குறித்து அக்கட்சியின் நிர்வாகி முரளி அப்பாஸ் விமர்சித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி ‘இந்தியன்2’ படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இந்த விவகாரம் சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கிரேன் ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, நடிகர் கமலுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் இன்று ஆஜரானார். அவரின் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது குறித்தும் மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப் பிரிவு மாநில செயலாளர் முரளி அப்பாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தேவையற்ற அழைப்பு.. காரணமற்ற விசாரணை.. அர்த்தமற்ற தாமதம்.. 10.30 மணிக்கு தொடங்கியது 12.30 தாண்டி இன்னும் முடியவில்லை. நம்மவருக்கு சம்மன்..” என குறிப்பிட்டுள்ளார்.