‘குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை, ஆனால் இறப்பது அவர்களே’ - கமல்ஹாசன்
குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை என்றும் எப்பொழுதும் அவர்கள் உயிரிழப்பதாகவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால், காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “ஸ்டெர்ட்லைட் ஆலைக்கு எதிராக நீதிக் கேட்டு மக்கள் அமைதியாகப் போராடிய பொழுதெல்லாம் அலட்சியப்படுத்தியது அரசுகள். அரசின் அலட்சியமே அனைத்து தவறுகளுக்கும் காரணம். இதில் குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை. அவர்கள் எப்பொழுதும் உயிர் இழக்கிறார்கள். முன்பு ஆலையினால், இப்பொழுது ஆணையினால். அனைவரும் அமைதிக் காக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.