குழந்தைக் கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க தனி செயலி -உயர்நீதிமன்றம் அறிவுரை

குழந்தைக் கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க தனி செயலி -உயர்நீதிமன்றம் அறிவுரை

குழந்தைக் கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க தனி செயலி -உயர்நீதிமன்றம் அறிவுரை
Published on

குழந்தைக் கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க தனி செயலியை உருவாக்கி விசாரணை செய்யலாம் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

குழந்தைகள் கடத்தலை தடுக்க உத்தரவிடக்கோரிய வழக்குகளை நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குனர் நாராயணன் ஆஜராகி குழந்தைகள் கடத்தலை தடுப்பது தொடர்பாக தனது தரப்பில் எழுத்துபூர்வமான வாதங்களை சமர்ப்பித்தார்.

அவர் தாக்கல் செய்த ஆவணங்களில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அனைத்து விதமான கடத்தல்கள் விசாரணை, மீட்பு நடவடிக்கைகள், கடத்தபட்டு மீட்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தப்படும் மறுவாழ்வு பணிகள் என்ன என்பது குறித்து கடந்த ஜூலை மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவின் நகலை தாக்கல் செய்தார். 

அதன்படி, குழந்தைகள் கடத்தல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட 90 நாட்களுக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்; சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தால் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு குற்றத்தின் தன்மை மற்றும் தீவிரத்தின் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும்; மத்திய மற்றும் மாநில, மாவட்ட அளவில் குழந்தைக் கடத்தல் வழக்கை கண்காணிப்பதற்கு என குழு அமைக்கப்பட வேண்டும்; அதை சிறப்பு அதிகாரி மூலமாக நிர்வகித்து பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நிதியில் இருந்து அனைத்து உதவிகளும், நிவாரணமும் சரியான முறையில் கிடைக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள குழுக்களிடையே முழுமையான ஒத்துழைப்பு இல்லாததால் கடத்தல் வழக்குகளை எப்படி கையாள்வது என்பது குறித்த புரிதல் இல்லாததால் குழந்தைகள் கடத்தல் வழக்குகளை தனி ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் மாவட்ட அளவில் விசாரணை செய்ய உத்தரவிட்டால், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆணையர்களிடம் இருந்து தகவல் பெற்று விசாரணை நடத்த உதவியாக இருக்கும். இந்த விசாரணையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என நாராயணன் குறிப்பிட்டிருந்தார். 

மேலும், அரசு வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளை வெவ்வேறு பாதுகாப்பு மையத்தில் இயந்திரத்தனமாக சேர்த்து விடுவதாவும்; வட மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டவரை தமிழகத்தின் பிற பகுதிகளில் சேர்ப்பதால் தங்களுக்கான குடும்பச் சூழலை குழந்தைகள் இழந்து விடுவதாகவும் குற்றம் சாட்டினார். 

சமூக நலத்துறையின் இயக்குநரகம், உரிய ஆவணங்கள் இல்லாத தனியார் காப்பகங்களில் மீட்கப்படும் குழந்தைகளை சேர்க்க அனுமதிக்கின்றனர். அதனால், ஒரே தொண்டு நிறுவனத்தின் வெவ்வேறு பெயர்களில் செயல்படும் பதிவு செய்யப்படாத தொண்டு நிறுவனங்களில் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். இதனால் அவர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் கேள்விக்குறியாகிறது. இதனால் மீட்கப்பட்ட குழந்தைகள் மறுவாழ்வு என்ற பெயரில் உள்நாட்டிலேயே கடத்தப்படுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை என நாராயணன் தெரிவித்தார்.

அனைத்தையும் பதிவு செய்த நீதிபதிகள் சத்யநாராயணன், சேசஷாயி அமர்வு, குழந்தைகள் கடத்தல் குறித்து விசாரணை செய்ய ஏதுவாக காவல்துறையினர் தனி செயலியை ஏற்படுத்தலாம் என அறிவுரை வழங்கியதுடன், இவ்வழக்கில் மாநில குற்ற ஆவணக் காப்பகத்தையும், மாற்றம் இந்தியா அமைப்பையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர். 

குழந்தைக் கடத்தலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து டிசம்பர் 12 ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com