மயிலாடுதுறை: விவசாயத்தை பாதிக்கும தனியார் தார் கலவை ஆலை: கிராம மக்கள் போராட்டம்

மயிலாடுதுறை: விவசாயத்தை பாதிக்கும தனியார் தார் கலவை ஆலை: கிராம மக்கள் போராட்டம்
மயிலாடுதுறை: விவசாயத்தை பாதிக்கும தனியார் தார் கலவை ஆலை: கிராம மக்கள் போராட்டம்

தரங்கம்பாடி அருகே மருதம்பள்ளம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியொன்றின் அருகே இயங்கும் தனியார் தார் கலவை ஆலையால், அப்பகுதி கிராமமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அனுகியபோதும் முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனக்கூறி, அந்த ஆலைக்கு வந்த ஒரு லாரியை மறித்துவைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மருதம்பள்ளம் கிராமத்தில், குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் தார் கலவை ஆலையொன்று அமைக்கப்பட்டது. அதன் இயக்கத்தின்போது, ஆலையிலிருந்து வரும் புகை மற்றும் ஜல்லி துகள்களால் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் ஆலையிலிருந்து வெளிவரும் கழிவுகளால் விவசாயம் பெருமளவு பாதிக்கபடுவதாகவும் சொல்லப்படுகிறது. மட்டுமன்றி, அவ்வழியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இந்தக் கழிவுகள் சிக்கலை ஏற்படுத்தி வருகிறதென மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி பொதுமக்கள் பலரும் வேதனை தெரிவித்துவந்த நிலையில், தங்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் ஆத்திரம் அடைந்து இன்றைய தினம் அவர்கள் அனைவரும் இணைந்து ஆலைக்கான தார் கலவையை கொண்டு வந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

மக்கள் போராட்டத்தைக் கண்ட அந்த ஆலை நிர்வாகத்தினர் உடனடியாக பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்முடிவில் குடியிருப்புவாசிகள், வாகன ஓட்டிகளை பாதிக்காதவாறு ஆலையின் செயல்பாடுகளை சீர்செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஆலை நிர்வாகத்தினர் தரப்பில் உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது. அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

- ஆர்.மோகன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com