பாதுகாப்பு அச்சுறுத்தல் - மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் தற்காலிக மூடல்
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் தற்காலிகமாக மூடப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லஸ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பேர், இலங்கை வழியாக தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. அந்த பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி தலைமையிலான காவல்துறையினர், கோவை மாவட்டம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தமிழ்நாடு கேரள எல்லையிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளிலும் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மக்கள் கூடும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கப்பல்போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் தற்காலிகமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.