மகா சிவராத்திரி: 51 வருடங்களாக கொதிக்கும் நெய்யில் வெறும் கையில் அப்பம் சுடும் மூதாட்டி

ஸ்ரீவில்லிபுத்தூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மூதாட்டி ஒருவர் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டார்.100 ஆண்டுகளாக நள்ளிரவில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அப்பம் சுட்ட மூதாட்டி
அப்பம் சுட்ட மூதாட்டிpt desk

செய்தியாளர்: மு.கருப்பஞானியார்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக வெறும் கையில் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

முதல் நாள் இரவில் பாசிப்பயறு, தட்டைப்பயறு, கருப்பட்டி ஆகியவைகளை உரலில் வைத்து இடித்து ஆப்பத்திற்கு தேவையான இனிப்பு உருண்டை செய்யப்படும். இந்த உருண்டையை இடிப்பதற்கு பெண்கள் நேர்த்திக்கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார்செய்து கொடுப்பார்கள்.

அப்பம் சுட்ட மூதாட்டி
அப்பம் சுட்ட மூதாட்டிpt desk

பின்னர் மகா சிவராத்திரி நள்ளிரவில் முத்தம்மாள் என்ற பாட்டி மற்றும் கோயில் பூசாரிகள் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு எடுப்பார்கள். கொதிக்கும் நெய்யை எடுத்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெற்றியில் பூசி விடுவார்கள்.

கடந்த காலத்தில் வள்ளியம்மாள் என்ற பாட்டி அப்பம் சுட்டு வந்த நிலையில், தற்போது முத்தம்மாள் என்ற மூதாட்டி கடந்த 51 வருடங்களாக அப்பம் சுட்டு வருகிறார். ஏழு ஊருக்கு பாத்தியப்பட்ட இந்த கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஏழு கூடையில் அப்பம் சுட்டு பின்பு பக்தர்களுக்கு வழங்கப்படும்.

மகா சிவராத்திரி அன்று நடைபெறும் இந்த பூஜையில், விரதமிருந்து கலந்து கொண்டு அப்பத்தை வாங்கி உண்பதால் உடலில் இருக்கும் நோய்கள் விலகும் என்பதும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

இதனால் பல தம்பதிகள் கலந்து கொண்டு மூதாட்டியிடம் ஆசி பெற்று அப்பம் வாங்கிச் சென்றனர். கடந்த 50 வருடங்களாக அப்பம் சுட்ட மூதாட்டி, 51 வது வருடம் வெறும் கையில் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு வழங்கிய நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com