மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட PM-2 மக்னா யானை... வளர்ப்பு யானையாக மாற்ற திட்டம்!

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட PM-2 மக்னா யானை... வளர்ப்பு யானையாக மாற்ற திட்டம்!
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட PM-2 மக்னா யானை... வளர்ப்பு யானையாக மாற்ற திட்டம்!

வயநாட்டில் மக்களை அச்சுறுத்தி வந்த PM-2 மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கேரள வனத்துறையினர் பிடித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருவரை கொன்றதோடு 50-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்திய PM-2 மக்னா யானை கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி தமிழக வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு முதுமலை அடர் வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இந்த நிலையில் அந்த யானை சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் கடந்த 10 தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு மாவட்ட வனப்பகுதிக்குள் புகுந்தது.

இதையடுத்து கடந்த 6 ஆம் தேதி அதிகாலை வயநாடு மாவட்டத்தின் முக்கிய நகர் பகுதியான சுல்தான் பத்தேரி நகருக்குள் புகுந்து சாலையில் நடந்து சென்ற ஒருவரை இந்த யானை தாக்கியது. யானையின் நடமாட்டத்தால் அச்சமடைந்த ஊர் மக்கள் அதனை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அரசியல் கட்சியினரும் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று போராட்டங்களிலும் ஈடுபட்டார்கள்.

இதைத் தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி யானையை பிடித்து, முகாம் கொண்டு சென்று வளர்ப்பு யானையாக மாற்றுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. அதன்படி நேற்று காலை முதல் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், யானை மற்றொரு ஆண் யானையுடன் சேர்ந்து, சதுப்பு நிலம் பகுதியில் இருந்ததால் அதை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இன்று காலை PM-2 மக்னா யானை சுல்தான் பத்தேரி பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள சிறிய வனப்பகுதியில் இருந்தது. அங்கு விரைந்த கேரள வனத்துறையினர் வெற்றிகரமாக யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர். பிடிக்கப்பட்ட இந்த யானை முத்தங்கா பகுதியில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மரக்கூண்டில் அடைத்து வளர்ப்பு யானையாக மாற்றபடவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com