ஆதாரத்தை கொடுங்க.. போராட்டத்தை விடுங்க..! : ஸ்டாலினுக்கு அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி
மிசாவில் கைதானதற்கான காரணத்தை தெரிவித்திருக்கலாமே? எதற்கு ஆர்ப்பாட்டம் என்று அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து, மிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இழிவு படுத்தியதாக திமுக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து திமுக சார்பில் அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. அமைச்சருக்கு எதிராக போராட்டங்கள் வேண்டாமென ஸ்டாலினும் நிர்வாகிகளுக்கு நேற்று அறிவுறுத்தினார்.
இந்நிலையில், மிசாவில் ஸ்டாலின் கைதானது குறித்த விவகாரத்திற்கு அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மு.க.ஸ்டாலின் வரலாற்றில் முக்கியமான விஷயம் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது. மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எனக்கு எழுந்த சந்தேகத்தை முன் வைத்தேன்.
இதற்காகதான் ஸ்டாலின் தான் கைது செய்யப்பட்டார் என்பதை தெரியப்படுத்தி இருக்கலாமே, பின் எதற்கு ஆர்ப்பாட்டம்.என்னை பற்றி திமுக கூறிய கருத்து மற்றும் அனைத்திற்கும் 2 நாட்களில் அதிமுக பதிலளிக்கும்” என கூறியுள்ளார்.