மதுரை-ஆண்டிப்பட்டி-தேனி : 12 ஆண்டுகளுக்குப் பின் தொடங்கிய ரயில் சேவை

மதுரை-ஆண்டிப்பட்டி-தேனி : 12 ஆண்டுகளுக்குப் பின் தொடங்கிய ரயில் சேவை
மதுரை-ஆண்டிப்பட்டி-தேனி : 12 ஆண்டுகளுக்குப் பின் தொடங்கிய ரயில் சேவை

மதுரை - தேனி ரயில் போக்குவரத்து 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் துவங்கியது.

கம்பம், போடிமெட்டு, இடுக்கி பகுதிகளில் விளையக்கூடிய ஏலக்காய், மிளகு, பஞ்சு, மற்றும் மூலிகை பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக ஆங்கிலேயர் காலத்தில் 1928 ஆம் ஆண்டு போடி - மதுரை இடையே குறுகிய பாதையில் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது.

காலப்போக்கில் பயணிகள் ரயிலாக மாற்றப்பட்ட நிலையில் 1954 ஆம் ஆண்டு குறுகிய பாதை - மீட்டர் கேஜ் ரயில் பாதையாக மாற்றப்பட்டது. பின்னர், மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரயில் பாதையாக மாற்றம் செய்வதற்காக 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மதுரை - போடி இடையே 98 கி.மீ. தூரத்திற்கு அகல பாதையாக மாற்றம் செய்யும் பணிகள் போதிய நிதி ஒதுக்காத காரணத்தால் சுணக்கம் ஏற்பட்டது. மக்களின் தொடர் கோரிக்கை மற்றும் போராட்டம் காரணமாக ரூ.506 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

அதன் மூலம், முதற்கட்டமாக மதுரை - தேனி இடையே 75 கிமீ தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. தேனி - போடி இடையேயான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 12 ஆண்டுகள் நடைபெற்ற பணிகள் நிறைவுற்று நேற்று பிரதமர் மோடி மீண்டும் ரயில் போக்குவரத்தை காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். அதன்படி, மதுரை - தேனி இடையே முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் சேவைஇன்று முதல் துவங்கியுள்ளது.

மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கும், தேனியில் இருந்து மாலை 6.15 மணிக்கும் இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயிலில் பயணம் செய்ய மதுரையில் இருந்து தேனிக்கு 45 ரூபாயும், பிற நிலையங்களுக்கு 30 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை வரை இயங்கும் ரயில் சேவையை சென்னை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும், தினமும் இரண்டு முறை மட்டும் இயக்கப்படும் ரயிலை 4 முறை இயக்க வேண்டும், விரைவு ரயிலை பயணிகள் ரயிலாக மாற்றம் செய்ய வேண்டும். மூன்று நிலையங்கள் தவிர்த்து கூடுதலாக நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி, கருமாத்தூர் ரயில் நிலையங்களிலும் ரயில் நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com