மதுரை | இம்மையிலும் நன்மை தருவார் கோயில் திருக்கல்யாண வைபவம் - திரளான பக்தர்கள் தரிசனம்
செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றானதும். பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிறப்புள்ள இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் மாசிப்பெருந் திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகல துவங்கியது. இதனையடுத்து தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில் விழாவின் சிறப்பு பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவம் கோயில் மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட மேடையில் மணக்கோலத்தில் மத்தியபுரியம்மன், சுவாமி நன்மைதருவார் மற்றும் பிரியாவிடையுடன் எழுந்தருளினர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளையடுத்து, வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக தெப்பத் திருவிழா நாளை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.