தலை தீபாவளி கொண்டாடிய அண்ணன் மகள் - ஆத்திரத்தில் சித்தப்பா செய்த விபரீத செயல்!
மதுரையில் தலைதீபாவளி கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த அண்ணன் மகள் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சித்தப்பா மற்றும் அண்ணன் மகள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகர் பகுதியைச் சேர்ந்த பவித்ரா (19) என்ற இளம்பெண் தனது வீட்டின் எதிரேயுள்ள பாலாஜி (21) என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில், கடந்த வாரம் காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இன்று பவித்ரா - பாலாஜி தம்பதியினர் தலைதீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது இன்றிரவு வீட்டின் முன்பாக பவித்ரா பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பவித்ராவின் சித்தப்பா கார்த்தி (40) என்பவர் திடீரென பவித்ராவின் முகத்தில் பெட்ரோலை ஊற்றியுள்ளார்.
அப்போது பட்டாசில் இருந்து வெளியேறிய தீப்பொறி பற்றி பவித்ராவின் முகம் மற்றும் தோளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க முயன்ற கார்த்தியை பவித்ராவின் கணவரான பாலாஜியின் நண்பர்கள் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறையினருக்கு வந்த தகவலையடுத்து சம்பவம் குறித்து எஸ்எஸ்.காலனி காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பவித்ரா காதலித்து திருமணம் செய்தது அவரது சித்தப்பாவிற்கு பிடிக்காத நிலையில் மதுபோதையில் பெட்ரோல் ஊற்றியது தெரியவந்துள்ளது.
தலைதீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்த தனது உடன் பிறந்த அண்ணன் மகள் மீது சித்தப்பாவே பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.