நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் மதுரை மாணவி!
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெறும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி போட்டிக்கு மதுரையை சேர்ந்த பள்ளி மாணவி தேர்வாகியுள்ளார்.
நாசாவின் அறிவியல் ஆராய்ச்சி குறித்து இந்தியா முழுவதும் 22 மாநிலங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 250 மாணவ, மாணவியர் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் அறிவியல் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 3 சிறந்த மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு அழைத்து செல்லப்படவுள்ளனர். இந்த போட்டியில் ’’டாக்டர் கலாம் மை ஹீரோ'' என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய மதுரையை சேர்ந்த பள்ளி மாணவி தான்யா இந்திய அளவில் முதல் மாணவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாசாவில் நடைபெறும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி போட்டிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறும் தான்யா, கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துவேன் என்றும் மகிழ்ச்சி பொங்கக் கூறியுள்ளார். மேலும் மே 13 ம் தேதி முதல் 15ம் தேதி வரை நாசாவில் நடைபெறும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி போட்டியில் மாணவி தான்யா உடன் மும்பை மற்றும் ஆந்திராவை சேர்ந்த இரண்டு மாணவர்களும் இந்தியா சார்பில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.