குழந்தைகளை விட்டுவிட்டு கடத்தல் கும்பல் ஓட்டம்
மதுரையில் பள்ளி செல்லும்போது கடத்தப்பட்ட தொழிலதிபரின் இரண்டு சிறுமிகள், காவல்துறையினரின் தீவிர தேடும் பணி எதிரொலியாக இரவு விடுவிக்கப்பட்டனர்.
மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகைச் செல்வன். இவரின் மகள்களான அனுஸ்ரீ, ஜெயஸ்ரீ ஆகிய இருவரும், நேற்று காலை காரில் பள்ளிக்குச் செல்லும் போது, ஓட்டுநரை தாக்கி மயக்க மருந்து கொடுத்துவிட்டு கடத்தப்பட்டனர். இது குறித்து அந்தச் சிறுமிகளின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் 6 தனிப்படைகள் அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, வெவ்வேறு பகுதிகளிலிருந்து கடத்தல்காரர்கள் பேசுவதை செல்போன் உரையாடல்கள் மூலம் கண்காணித்த காவல்துறையினர், அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
கடத்தல்காரர்களை, காவல்துறையினர் நெருங்கியதை அறிந்ததால், சிறுமிகள் இருவரையும் அவர்களது வீட்டின் அருகே இரவு 11 மணி அளவில் விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். கடத்தல்காரர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.