தடுப்பு சுவர் இல்லாத சாலைகள்: விபத்து ஏற்படும் அபாயம்!
மேலூரில் உள்ள சாலையில் தடுப்புச் சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து நத்தம் செல்லும் சாலை அண்மையில் சீரமைக்கப்பட்டது. இந்த சாலை சென்னகாரம்பட்டி, மேலவளவு, பட்டூர், சேக்கிப்பட்டி, சமுத்திராப்பட்டி என 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக நத்தம் செல்கிறது. இந்நிலையில் சென்னகாரம்பட்டி கண்மாய் கரை சாலைப் பகுதியில் சுமார் 1 கி.மீ தூரம் வரை போதிய தடுப்புச் சுவர்களோ, தடுப்பு வேலிகளோ இல்லாததால் இருசக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. அத்துடன் சாலையில் ஒரே நேரத்தில் இரண்டு கனரக வாகனங்கள் எதிராக வரும் சமயங்களில் விபத்து ஏற்படும் அபாயமும், போக்குவரத்து நெரிசலும் உண்டாகிறது. இதனால் தடுப்பு சுவர் இல்லாத சாலையை நெடுச்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து போதிய தடுப்புச் சுவரும், எச்சரிக்கை பதாகையும் வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.