மதுரை காவல் உதவி ஆணையர் மோகன்தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடாததால் காவல் உதவி ஆணையர் மோகன்தாஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டிஜிபி டி.கே ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள், மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று ஆவணங்களை நகல் எடுத்த விவகாரத்தில், கலால் வட்டாட்சியர் சம்பூர்ணம், இடைநிலை உதவியாளர்கள் இரண்டு பேர், மற்றும் துப்பரவு தொழிலாளர் என 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்திருந்தார். குறிப்பாக மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் உதவியாளர் மாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக எஸ்.நாகராஜன், உதவி அலுவலராக சாந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மதுரையில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மதுரை மாநகர குற்றம் உதவி ஆணையர் மோகன்தாஸ் மற்றும் மதுரை ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் கண்ணனை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடாததால் காவல் உதவி ஆணையர் மோகன்தாஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டிஜிபி டிகே ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், மதுரை ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் கண்ணனை ராமநாதபுரத்திற்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.