மதுரை முருக பக்தர்கள் மாநாடு | நீண்ட நடந்த விசாரணை! இறுதியில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு
செய்தியாளர்: இ.சகாய பிரதீபா
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாடு நடைபெறும் அம்மா திடலில், 5 லட்சம் பேர் இணைந்து ஒரே நேரத்தில் கந்த சஷ்டி பாடலையும், திருப்புகழையும் பாட உள்ளனர். எவ்வித அரசியல் நோக்கமும் இல்லாமல் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. ஆன்மிக கருத்துக்களை கலை நிகழ்ச்சிகள் வாயிலாகவும், சொற்பொழிவுகள் வாயிலாகவும் மாநாட்டில் வழங்கவுள்ளோம்.
இந்நிலையில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை ஜூன் மாதம் 10ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ள திடலில் வைத்து, தொடர்ச்சியாக 22 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் 12 வரையிலும், மாலை 5 முதல் 7 மணி வரையிலும் பூஜை செய்ய அனுமதி கோரி விண்ணப்பித்தோம். ஆனால், மதுரை மாவட்ட உதவி காவல் துறை கண்காணிப்பாளர் மைக் செட் வைக்கவும் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து தொடர்ச்சியாக வழிபடவும் அனுமதி வழங்க மறுத்துவிட்டார்.
ஆகவே முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள அம்மா திடலில் ஜூன் 10ஆம் தேதி முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து 22ஆம் தேதி வரை காலை, மாலை வழிபாடு செய்து, பிரசாதம் வழங்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், ' அரசபாண்டி என்பவர் இந்து முன்னணி அமைப்பு சார்பாக ஏற்கனவே அனுமதி கோரி அளித்த மனு தொடர்பாக, நேற்றுதான் 36 கேள்வி பதில்கள் கேட்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பதில் அளிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, 'அறுபடை மாதிரிகளை வைத்து வழிபட ஆகம விதிகள் உள்ளதா? என கேள்வி எழுப்பினர் அதற்கு ஆகம விதிகளின் படியே அறுபடை வீடுகளின் மாதிரைகளை வைத்து வழிபட முடிவு செய்யப்பட்டுள்ளது. காலையும், மாலையும் 2 மணி நேரம் பூஜை நடத்தி, பிரசாதம் மட்டுமே வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், 'தொடர்ச்சியாக 12 நாட்கள் பூஜை மற்றும் தரிசனத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தினமும் 200-ல் இருந்து 300 நபர்கள் அப்பகுதியில் கூடுவதற்கான வாய்ப்புள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, ' இதே முறையிலேயே பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது அங்கு இதுபோல நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இங்கு மட்டும் ஏன் அனுமதி வழங்கப்படவில்லை? இது சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துமா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில், 'சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தலாம். அதோடு மனுதாரர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடமும் உரிய அனுமதியை பெற வேண்டும். அதற்கான அனுமதியை பெறவில்லை' என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, 'காவல்துறையினர் நடுநிலையான அமைப்பாக செயல்பட வேண்டும். இது ஒரு ஜனநாயக நாடு' என குறிப்பிட்ட நீதிபதி வழக்கு தொடர்பாக மதுரை மாநகர உதவி காவல் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.