1500 கிலோ மீட்டருக்கு அப்பால் ரயில்வே தேர்வு மையமா? | மாற்றக் கோரி மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம்
செய்தியாளர்: செ.சுபாஷ்
ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் லோகோ பைலட் காலி இடங்களுக்கான CBT 2 தேர்வுக்கு 6000-க்கும் மேலானவர்கள் CBT 1 தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் இருந்து தகுதி பெற்றுள்ளார்கள். நீட் தேர்வு எதிர்வரும் மார்ச் 19, 2025 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தேர்வு மையங்கள், நிறைய தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து தெலுங்கானா வரை செல்ல வேண்டியுள்ளது. இதனால் தேர்வர்கள் நிதிச் சுமைக்கும், கடுமையான அலைச்சலுக்கும் ஆளாகும் நிலை உள்ளது. இந்நிலையில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,
மதுரை நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த பல தேர்வர்களின் பெற்றோர் என்னை அணுகி தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்குள் மாற்றித் தருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆகவே தேர்வு மையங்களை உடனடியாக மாற்றித்தருமாறு கேட்டு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.