`அவையிலிருந்து வெளியேறிய அதே வேகத்துடன்...’-ஆளுநருக்கு எம்.பி சு.வெங்கடேசன் காட்டமான பதில்

`அவையிலிருந்து வெளியேறிய அதே வேகத்துடன்...’-ஆளுநருக்கு எம்.பி சு.வெங்கடேசன் காட்டமான பதில்
`அவையிலிருந்து வெளியேறிய அதே வேகத்துடன்...’-ஆளுநருக்கு எம்.பி சு.வெங்கடேசன் காட்டமான பதில்

"மீண்டும் தமிழக ஆளுநர் என அழைப்பிதழ். தமிழ்நாட்டை விட்டே ஆளுநர் வெளியேற வேண்டும்" என எம்.பி சு.வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகம் என்ற சர்ச்சை பேச்சால், தமிழ்நாடு சட்டசபை நேற்று ஆளுநர் உரையுடன் பரபரப்போடு தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றிய போது, திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் அவர் தவிர்த்தார். அது மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்ற வாக்கியத்தையும் ஆளுநர் தவிர்த்ததாகக் கூறப்படுகிறது. இது சலசலப்பை ஏற்படுத்தியதோடு, ஆளுநரின் செயலை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டித்ன.

ஆளுநர் உரையைத் தொடர்ந்து சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அரசின் உரையை ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தம் அளிப்பதாகவும், அவர் பேசியது அரசின் கொள்கைக்கு மாறானது என்றும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து சட்டசபையில் இருந்து ஆளுநர் ரவி பாதியிலேயே வெளியேறினார்.

இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து பொங்கல் திருவிழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரை விழாவுக்கு வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்று இருந்தது. பொங்கல் விழாவுக்கு இப்பொழுது வந்துள்ள அழைப்பில் தமிழக ஆளுநர் என்று இருக்கிறது. நேற்று அவையிலிருந்து வெளியேறிய அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு ஆளுநர் வெளியேற்றப்பட வேண்டும்” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com