"இந்தியில் கடிதம் அனுப்புவதை நிறுத்துக"- இன்சூரன்ஸ் நிறுவன தலைவருக்கு மதுரை எம்.பி கடிதம்

"இந்தியில் கடிதம் அனுப்புவதை நிறுத்துக"- இன்சூரன்ஸ் நிறுவன தலைவருக்கு மதுரை எம்.பி கடிதம்

"இந்தியில் கடிதம் அனுப்புவதை நிறுத்துக"- இன்சூரன்ஸ் நிறுவன தலைவருக்கு மதுரை எம்.பி கடிதம்
Published on

பாலிசிதாரருக்கு இந்தியில் கடிதங்கள் அனுப்புவதை நிறுத்த வலியுறுத்தி இன்சூரன்ஸ் நிறுவன தலைவருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தஜிந்தர் முகர்ஜி அவர்களுக்கு, உங்கள் மதிப்புமிகு நேசனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசிதாரர்கள் எனது பார்வைக்கு கொண்டு வந்த ஒரு முக்கியமான பிரச்னையை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். உங்கள் நிறுவனத்தின் பாலிசிதார்களுக்கு அனுப்பப்படும் பாலிசி புதுப்பித்தல், நினைவூட்டல் கடிதங்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் உள்ளது. இதனால் நிறைய வாடிக்கையாளர்களுக்கு உங்கள் கடிதத்தின் செய்தியை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வணிகக் களத்தில் சந்தைப் பங்கை தக்க வைக்க, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை எவ்வளவு பெரு முயற்சியோடு எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதை நான் அறிவேன். இப் பின்புலத்தில் வாடிக்கையாளர்களுடனான தகவல் தொடர்புகள் அவர்களின் இதயத்திற்கு நெருக்கமாகவும், நேசிக்கக் கூடியதுமான மொழியில் அமையவேண்டுமென்று எதிர்பார்ப்பது இயற்கையானது. தமிழகத்தின் அறுதிப் பெரும்பான்மை மக்களுக்கு இந்தி தெரியாது.

ஆனால் நேசனல் இன்சூரன்ஸ் கம்பெனி கடிதங்களில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் அனுப்புவது வருத்தம் தருகிறது. மற்ற பல மத்திய அரசு நிறுவனங்களும் கடைப்பிடிக்காத ஒரு நடைமுறையை எதற்காக நேசனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிட்டெட் துவங்கியுள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது. நேசனல் இன்சூரன்ஸ் கம்பெனி செய்வது, வணிக ஈட்டல் மற்றும் வாடிக்கையாளர் மனங்களை வென்றெடுத்தல் ஆகிய இரண்டு கோணங்களில் இருந்தும் அறிவார்ந்த நடவடிக்கை அல்ல என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் எனக் கருதுகிறேன். ஆகவே படிவங்களில் இந்தி பயன்படுத்தப்படுவதை நிறுத்துமாறும் மற்றும் படிவங்களில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் இடம் பெறுவதை உறுதி செய்யுமாறும் வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com