‘பிரத்யேக கருவி’யுடன் குழந்தையை காக்க வரும் மதுரை மணிகண்டன் - யார் இவர் ?
திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள குழந்தையை காப்பற்றுவதற்காக மதுரையிலிருந்து கருவியுடன் மணிகண்டன் வந்து கொண்டிருக்கிறார்.
திருச்சியில் இரண்டு வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி வருகிறது. அதனை மீட்க வட்டாட்சி வருவாய் அதிகாரிகள், போலீஸார், ஆட்சியர், மீட்புக் குழுவினர், ஊர்மக்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் கையை அசைக்கும் காட்சி வெளியாகி காண்போரை கலங்கச் செய்தது. குழந்தையை எப்படியாவது மீட்க வேண்டும் என காண்போர் அனைவரும் பரிதவிக்கின்றனர்.
ஆனால் தமிழகத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை விழுவது இது ஒன்றும் புதிதல்ல. அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. இது ஒரு தொடர் சோகக் கதையாக இருக்கிறது. இதேபோன்று மதுரையில் உள்ள முத்துப்பட்டியில் சில ஆண்டுகளுக்கு முன்பு 3 வயது குழந்தை ஒன்று தவறி விழுந்தது. அதன் பெற்றோர் மற்றும் ஊர்மக்கள் பெரும் போராட்டத்திற்கு பின்னர் குழந்தையை மீட்டனர். அந்த குழந்தையின் தந்தை தான் மணிகண்டன். திருநெல்வேலியில் உள்ள ஐ.டி.ஐ கல்லூரி ஒன்றில் படித்த இவர், தனது குழந்தையும், தாங்களும் பெற்ற துயரத்தை யாரும் இனி பெறக்கூடாது என முடிவெடுத்தார்.
இதனால் ஆழ்துளையில் விழும் குழந்தைகளை மீட்பதற்காக பிரத்யேகமாக கருவி ஒன்றை 2003 இல் கண்டுபிடித்தார். அந்தக் கருவியை நவீனப்படுத்தும் விதமாக சிறிய கேமரா, மருத்துவ சோதனை செய்யும் கருவிகள், குழந்தையை லேசாக கைபிடித்து தூக்கும் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை இணைத்து வெற்றிகரமாக பரிசோதித்தார். இதற்காக விருதுகளையும் அவர் பெற்றார். அவரது கண்டுபிடிப்பிற்கு தேசிய மீட்புக் குழுவினர் வரவேற்பு தெரிவித்ததுடன், வெளி மாநிலங்களில் இருந்து அரசு சார்பில் கருவியை வாங்கிக்கொண்டனர்.
இந்த கருவி மூலம் ஆழ்துளையில் விழுந்த பல குழந்தைகள் மணிகண்டன் உயிருடன் மீட்டுள்ளார். ஆனால் தமிழக அரசு மணிகண்டன் கண்டுபிடிப்பை உரிய முறையில் இதுவரை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இவரது கண்டுபிடிப்பை தமிழ் திரைப்படமான ‘அறம்’ உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.
தற்போது திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவிக்கும் 2 வயது குழந்தையை மீட்பதற்கு மதுரையிலிருந்து மணிகண்டன் திருச்சி விரைந்து கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அவர் திருச்சி அடைந்துவிடுவதாக புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் கருவி மூலம் குழந்தையை கட்டாயம் மீட்டுவிட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.