காதல் திருமணம் செய்த இளைஞரை விரட்டி வெட்டிய பெண் குடும்பத்தார்
மதுரையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞரை பெண்ணின் உறவினர்கள் பயங்கர ஆயுதங்களால் விரட்டி வெட்டிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கீழ்சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவரும் முனிச்சாலை என்னுமிடத்தைச் சேர்ந்த மீனாள் என்பவரும் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் காதலை மீனாள் குடும்பத்தினர் ஏற்காததால், கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் திருச்செந்தூரில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை மீனாளின் சகோதரர்கள் மணிமாறன், கார்த்திக் உட்பட 4 பேர் இருசக்கர வாகனத்தில் பொன்ராஜ் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது பொன்ராஜை வாள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் விரட்டி வெட்டிவிட்டு அவர்கள் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பொன்ராஜ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மீனாளின் சகோதரர்கள் மணிமாறன், கார்த்திக் ஆகியோரை வண்டியூர் அருகே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.