மதுரை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் | காளை முட்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
செய்தியாளர்: மணிகண்டபிரபு
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் 14ம் தேதி அவனியாபுரம், 15ம் தேதி பாலமேடு, 16ம் தேதி அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளின் போது போட்டியை பார்வையிட வந்த பார்வையாளர்கள், போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் என மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரரான விளாங்குடியைச் சேர்ந்த நவீன்குமார் உயிரிழந்தார். இதனையடுத்து 16ஆம் தேதி நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்வையிட வந்த பெரியசாமி என்ற முதியவர் மாடு முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் காளை சேகரிக்கும் இடத்தில் நின்று கொண்டு காளை ஓடி வருவதை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அப்போது அவரின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் காளை முட்டியதில் காயமடைந்த அவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது மாடுபிடி வீரர் ஒருவர், பார்வையாளர்கள் இருவர் என உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தம் 3 ஆக உயர்ந்துள்ளது.