“மதுரை மருத்துவனையில் 3 பேர் இறந்தது மாரடைப்பால் தான்” - சுகாதாரத்துறை செயலர் பீலா
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் பழுதானது உண்மைதான் எனத் தலைமை மருத்துவர் வனிதா தெரிவித்துள்ளார்.
மதுரையில் நேற்று காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6.20 மணியிலிருந்து 8.10 மணிவரை மின்தடை ஏற்பட்டது. மின்தடை காரணமாக, மதுரை அரசு மருத்துவமனையில் விபத்து காய சிகிச்சை பிரிவு 101ல் சிகிச்சையில் இருந்த மல்லிகா, பழனியம்மா, ரவிசந்திரன் ஆகிய மூன்று பேருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் தடைபட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனை ஜெனரேட்டர்களும் இயங்காததால், அவர்கள் ஆக்சிஜன் வாயு கிடைக்கபெறமால் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த ராஜாஜி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வனிதா, “கனமழை காரணமாக ஒரு மணிநேரம் மின்தடை இருந்தது உண்மைதான். ஜெனரேட்டர் பழுதானதும் உண்மைதான். ஆனால் நாங்கள் 2 மணிநேரம் தாக்கு பிடிக்கும் அளவிற்கு பேட்டரி பேக்கப் வைத்துள்ளோம். ஒவ்வொரு வெண்டிலேட்டருக்கும் தனித்தனி பேட்டரி பேக்கப் உள்ளது. அதன் மூலம்தான் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அதனால் மின்தடை ஏற்பட்டு ஜெனரேட்டர் இயங்காததால் அவர்கள் உயிரிழந்தனர் என்பது தவறான செய்தி. அந்த வார்டில் 10 க்கும் மேற்பட்டோர் வெண்டிலேட்டர் பயன்படுத்தி சிகிச்சை பெற்று வந்தனர். அதில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 3 பேர் தான் உயிரிழந்தனர். ஜெனரேட்டர் பழுதானது குறித்து விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மூன்று நோயாளிகளும் மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்துள்ளார். மின்தடையால் செயற்கை சுவாசம் தடைபட்டு மூன்று பேர் உயிரிழக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அத்துடன் மின்சார தடைக்கு முன்னதாகவே மாரடைப்பு ஏற்பட்டு 3 பேரும் உயிரிழந்துவிட்டதாகும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும், முதற்கட்ட விசாரணையில் அந்த மூன்று பேரும் மாரடைப்பில் இறந்தது தெரியவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.