எடுக்காத நீட் பயிற்சி வகுப்புக்கு கணக்கு காட்டிய தலைமை ஆசிரியர்

எடுக்காத நீட் பயிற்சி வகுப்புக்கு கணக்கு காட்டிய தலைமை ஆசிரியர்

எடுக்காத நீட் பயிற்சி வகுப்புக்கு கணக்கு காட்டிய தலைமை ஆசிரியர்
Published on

நீட் தேர்வு பயிற்சி வழங்குவதற்கான அரசின் தொகையை முறைகேடாக பயன்படுத்திய தலைமை ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நெல்லை மாவட்டம், வீரகேரளம்புதூரைச் சேர்ந்த பரசுராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டுமென்ற நோக்கில்,  2017 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டன. இதில் பயிற்சி வழங்கும் முதுநிலை ஆசிரியர்களுக்கு மதிப்பூதியமாக வழங்க 58,800 ரூபாய், LCD projector, கணினி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக 1 லட்சத்து 66 ஆயிரம் என மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 800 ரூபாய் ஒதுக்கப்பட்டது. 

இந்நிலையில், கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீட் பயிற்சிக்காக கருவிகள் வாங்கியதாகவும் மற்றும் 7 ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்கியதாகவும் கணக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அந்த ஆசிரியர்கள் பயிற்சியும் வழங்கவில்லை அவர்களுக்கு மதிப்பூதியமும் வழங்கப்படவில்லை. தலைமை ஆசிரியர் முறைகேடு செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் பயனில்லை. ஆகவே, ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்குவதற்கான அரசின் தொகையை முறைகேடாக பயன்படுத்தியதோடு, தவறாக கணக்கு சமர்ப்பித்த கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் தலைமை ஆசிரியர் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 2 வாரத்தில் நடவடிக்கை முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் தலைமை ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com