சித்த மருத்துவம் நடைமுறையில் இருக்கா..இல்லையா? நெருக்கடி காலத்தில் செய்ததை மறந்துவிட்டோமா? - நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Siddha, Madurai Court
Siddha, Madurai CourtPT

உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களில், "தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் அலுவலர்கள் நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பை சென்னை மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) வெளியிட்டது. நாங்கள் சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்கள். நாங்கள் அளித்த விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, எங்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.

சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்களைக் கருத்தில் கொள்ளவில்லை

20.12.2022 அன்று நடைபெற்ற எழுத்துத் தேர்வையும் எழுதினோம். ஆனால், தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தேர்வுப் பட்டியலில் எங்களின் பெயர்கள் இல்லை. சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்களைக் கருத்தில் கொள்ளவில்லை. எனவே உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட தேர்வுபட்டியலை ரத்து செய்து, புதிய தேர்வு பட்டியலை வெளியிடக் வேண்டும்" என கூறியிருந்தனர்.

இந்த மனுவினை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,"சித்த மருத்துவத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் தனிச்சிறப்பும், பந்தமும் உண்டு. சித்த மருத்துவம் தமிழ்நாட்டு கலாச்சாரத்தோடு ஒன்றிது. மேலும் பல்வேறு கோவில்களில் சித்த மருத்துவ முகாம் முன்னர் செயல்பட்டு வந்தது. தற்பொழுது அது செயல்படுகிறதா? என தெரியவில்லை.

நெருக்கடி காலங்களில் சித்த மருத்துவம்!

பல்வேறு நெருக்கடியான காலங்களில் சித்த மருத்துவர்களின் பங்கை நாம் மறந்து விட முடியாது. கொரோனா தொற்று காலத்தில் கபசுர குடிநீர், அதே போல் டெங்கு காய்ச்சல் பரவிய போது நிலவேம்பு கசாயம் போன்றவற்றை வழங்க தமிழ்நாடு அரசே நடவடிக்கைகளை முன்னெடுத்தது. சித்த மருத்துவக் கல்லூரிகளை அரசு நடத்தி வருகிறது. அவர்களுக்கான உரிய அங்கீகாரம் என்பது இருக்கிறது.

சித்த மருத்துவ சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையே!

தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் நவீன முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே அங்கீகரிக்கப்பட்ட மருத்துவத் துறையில் இருந்து வழங்கப்படும் சித்த மருத்துவ சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையே.

எதுவும் பழமையானதும் அல்ல புதுமையானதும் அல்ல

தேர்வு முறையில் சித்த மருத்துவ பட்டம் பெற்றவர்களை தகுதி நீக்கம் செய்தது சட்ட விரோதமானது. தமிழகத்தில் சித்த மருத்துவம் நடைமுறையில் இருக்கிறதா? என தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இங்கு எதுவும் பழமையானதும் அல்ல புதுமையானதும் அல்ல, நடைமுறை செயல்பாடுகளை பொறுத்தது. மருந்து என்பது சித்த மருத்துவத்தை உள்ளடக்கியது என நான் நம்புகிறேன். மேலும் இந்திய மற்றும் தமிழ்நாடு சித்த மருத்துவங்கள் பல்வேறு விதமான நோய்களுக்கு தீர்வளித்திருக்கிறது. அலோபதி முறையில் எல்லா மருத்துவ கேள்விக்கும் பதிலும் இல்லை.

தேர்வு பட்டியலை ரத்து செய்து உத்தரவு

எனவே மனுதாரர்களை "உணவு பாதுகாப்பு அலுவலர் " பதவியில் நியமிப்பது தொடர்பாக பரிசீலிக்க உரிமை உண்டு என நான் கருதுகிறேன். ஆகவே, உணவு பாதுகாப்பு அலுவலர் நியமம் தொடர்பாக வெளியிட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்து, மீண்டும் மனுதாரர்களை இணைத்து பரிசீலனை செய்து புதிய தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கினை நீதிபதி முடித்து வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com