ராமநாதபுரம் மாவட்டம் திணைக்குளத்தில் 18 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ள வகுப்பறை கட்டிடங்களின் கட்டுமான பணிகள் குறித்து ஐஐடி பேராசிரியர் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி ஊராட்சிக்குட்பட்ட திணைக்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 700 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 18 மாதங்களுக்கு முன்பு இந்தப் பள்ளிக்காக புதிதாக வகுப்பறை கட்டிடங்கள் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. ஆனால் இந்தப் புதிய வகுப்பறை கட்டிடங்கள் மாணவர்கள் பயன்படுத்துவதற்கு முன்னதாகவே இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே மாணவர்கள் வகுப்பறைகளில் சென்று படிக்க முடியாமல் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
புதிதாக கட்டபட்ட கட்டிடத்தில் மழை நீர் கசிகிறது. இது தரமற்ற முறையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளதை தெளிவுபடுத்துகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் பள்ளி வகுப்பறை கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஒப்பந்தாரர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாளிதழில் ஒன்றில் செய்தி வெளியானது. இந்தச் செய்தியின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை தாமாக முன் வந்து வழக்கை எடுத்து விசாரித்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு , பள்ளியில் புதிதாக கட்டபட்ட வகுப்பறையின் கட்டிடங்களை ஐஐடி பேராசிரியரை கொண்டு ஆய்வு செய்து கட்டுமான பணியின் தரத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டனர். மேலும் இது குறித்து தமிழகப் பொதுப்பணித்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கினை பிப்ரவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.