3 புள்ளிமான்கள் எங்கே? : அறிக்கை தாக்கல் செய்ய வனப்பாதுகாவலருக்கு உத்தரவு 

3 புள்ளிமான்கள் எங்கே? : அறிக்கை தாக்கல் செய்ய வனப்பாதுகாவலருக்கு உத்தரவு 
3 புள்ளிமான்கள் எங்கே? : அறிக்கை தாக்கல் செய்ய வனப்பாதுகாவலருக்கு உத்தரவு 

தஞ்சை சிவகங்கை வன உயிரின பூங்காவில் இருந்து காணாமல் போன 3 புள்ளிமான்கள் தொடர்பாக, தஞ்சை வனப்பாதுகாவலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தஞ்சாவூரை சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தஞ்சாவூரில் 1871, 1872ஆம் ஆண்டுகளில் சிவகங்கை பூங்கா உருவாக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் கேபிள் கார், மோட்டார் போட்டிங், அறிவியல் பூங்கா, விலங்கியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது தஞ்சாவூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிவகங்கை பூங்கா, சிவகங்கை கண்மாய் ஆகியவற்றை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலை 2019 ஜனவரி மாதம் முதல் மூடப்பட்டது. 

மிருகக்காட்சி சாலையில், 44 புள்ளிமான்கள் , 8 முயல்கள், 40 புறாக்கள், 6 சீமை எலிகள், 2 பச்சை கிளிகள் பராமரிக்கப்பட்டு, ஒப்பந்த அடிப்படையில் உணவு அளிக்கப்பட்டு வந்தது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கப்பட்டது. சிவகங்கை பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருவதால், இங்கிருந்த விலங்குகள் கோடியக்கரை வன பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ஊடகங்களில் பேட்டி அளித்தபோது 41 புள்ளி மான்களே ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

மீதமுள்ள மூன்று புள்ளி மான்கள் என்ன ஆனது என்பது குறித்து தெரியவில்லை. அது தொடர்பான நடவடிக்கை கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே சிவகங்கை பூங்காவில் காணாமல் போன மூன்று புள்ளி மான்களை கண்டுபிடிக்கவும் அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும்  உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் 2 புள்ளி மான்கள் உடல்நலக் குறைவு காரணமாக  உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், அது தொடர்பாக, தஞ்சை வனப்பாதுகாவலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com