ஹெல்மெட் அணியாததால் தாக்கப்பட்ட வழக்கறிஞர்: போலீஸ் மன்னிப்பு கடிதம் வழங்க உத்தரவு

ஹெல்மெட் அணியாததால் தாக்கப்பட்ட வழக்கறிஞர்: போலீஸ் மன்னிப்பு கடிதம் வழங்க உத்தரவு

ஹெல்மெட் அணியாததால் தாக்கப்பட்ட வழக்கறிஞர்: போலீஸ் மன்னிப்பு கடிதம் வழங்க உத்தரவு
Published on

ஹெல்மெட் அணியாமல் சென்ற விவகாரத்தில் தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு தலா 1001 ரூபாயை வரைவோலை எடுத்து வழங்கவும், மன்னிப்புக் கடிதம் அளிக்கவும் தலைமைக் காவலர்கள் இருவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞராக இருக்கும் ஒருவர் தீபாவளி விடுமுறைக்காக தனது சொந்த ஊரான நெல்லைக்கு சென்றுள்ளார். கடந்த 25-ஆம் தேதி வழக்கறிஞர் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது,  தென்காசி- சங்கரன்கோவில் சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

SVC கல்லூரி அருகே வழக்கறிஞர் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து ஆள்மாறாட்டம் செய்தது, காவல் துறையினரைத் தாக்க முயன்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்த போலீசார் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து,  மறுநாள் காலை சிவகிரி நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரிய மனு விடுமுறைக் கால அமர்வில், அவசர மனுவாக விசாரிக்கப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டது. அதோடு சம்பந்தப்பட்ட தலைமை காவலர் இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. தலைமைக் காவலர்கள் சிவராமகிருஷ்ணன், பாலமுருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது வழக்கறிஞரின் வாகனம் இன்னமும் புளியங்குடி காவல் நிலையத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக வாகனத்தை பறிமுதல் செய்ய விதியுள்ளதா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, வழக்கறிஞரின் வாகனத்தை மதியம் 1 மணிக்குள்ளாக அவரின் உறவினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

மீண்டும் மதியம் விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞரைத் தாக்கி காயம் ஏற்படுத்தியதற்காக, தலைமை காவலர்கள் சிவராமகிருஷ்ணன், பாலமுருகன் ஆகிய இருவரும் மன்னிப்பு கோரி கடிதம் எழுதி வழக்கறிஞரிடம் அளிக்கவும், தலா 1001 ரூபாயை வரைவோலையாக எடுத்துக் கொடுக்கவும் உத்தரவிட்டார். 

தொடர்ந்து, இந்த வழக்கு முடிக்கப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதற்கான அறிக்கையை நவம்பர் 4ல் கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய காவல் துறையினருக்கும், 5ஆம் தேதிக்குள்ளாக வழக்கை முடித்து வைக்க நீதித்துறை நடுவருக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

தொடர்ந்து வழக்கறிஞர்களும்- காவல்துறையினரும் நண்பர்களாக இருக்க வேண்டும். காவல்துறையினர் தங்களின் சீருடை, லத்தி, துப்பாக்கி ஆகியவற்றை நன்மையான விஷயங்களுக்காகவே பயன்படுத்த வேண்டும். ஹெல்மெட் இல்லையென தடுத்து நிறுத்தினால் உரிய அபராத்தை செலுத்த வேண்டும். பணம் இல்லையெனில், ரசீதைப் பெற்றுக்கொண்டு பிறகு அபராத்ததை செலுத்தலாம், என்ற கருத்தையும் நீதிபதி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com