வாகனங்களில் பின்பக்க கண்ணாடிகள் இல்லாததால் விபத்து
பின்பக்க காட்சி கண்ணாடிகள் இன்றி வாகனங்களை ஓட்டுபவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்க கோரிய மனுவை பரிசீலித்து 4 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," சமீப காலங்களில் 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாகனங்களில் இருக்கும் பக்கவாட்டு கண்ணாடி மற்றும் பின்பக்க காட்சி கண்ணாடிகளை அகற்றி விட்டு வாகனங்களை ஓட்டுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் அதனை பிறரை ஈர்க்கும் விசயமாக எண்ணி செய்து வருவது அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படும் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்து ஆய்வுப்பிரிவின் ஆய்வுப்படி 15 முதல் 24 வயதிற்குட்பட்ட 48,420 பேர் உயிரிழந்துள்ளனர். 77.1% விபத்துக்கள் ஓட்டுநரின் தவறாலேயே நிகழ்கிறது. கண்ணாடிகளை அகற்றி விட்டு, கண்ணாடிகளின்றி வாகனத்தை இயக்குவது மோட்டார் வாகன சட்டப்படி குற்றம். ஆனால் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பெங்களூருவில் பக்க மற்றும் பின்பக்க காட்சி கண்ணாடிகளின்றி வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதமாக ரூ.300 வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஆகவே, கண்ணாடிகளின்றி 2 சக்கர, வாகனங்களை ஓட்டுபவர்களிடமிருந்து அபராதம் வசூலித்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை ஆணையர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் அமர்வு மனுதாரரின் மனுவை பரிசீலித்து 4 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.