ஃபேஸ்புக்கில் மோடியை விமர்சித்தவருக்கு நூதன தண்டனை
பிரதமர் மோடி குறித்து ஃபேஸ்புக்கில் விமர்சித்தவர் ஓராண்டுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெபின் சார்லஸ் என்பவர், பிரதமர் குறித்து தவறான முறையில் சித்தரித்து கருத்துப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். பிரதமரை அவதூறாக விமர்சித்த குற்றத்திற்காக ஜெபின் சார்லஸ் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து, ஜெபின் சார்லஸ் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு முன் ஜாமீன் வழங்கியது. அதே நேரம் அவர் மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஓராண்டு காலம் சமூக வலைதளங்கள் பயன்படுத்தத் தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிபந்தனையை ஜெபின் மீறினால் முன்ஜாமீன் ரத்தாகும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.