பெண் காவலருக்கு ஏற்பட்ட அச்சத்தை போக்கும் வகையில் நீதிபதிகள் பேச்சு
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலரிடம் நீதிபதிகள் செல்போன் மூலம் பேசினர்.
சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வழக்கை சிபிஐ எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் காவல் ஆய்வாளர் உட்பட 5 பேரை கைது செய்து உள்ளனர்.
இந்த வழக்கு குறித்த விசாரணை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று தொடங்கியது. அப்போது பேசிய நீதிபதிகள் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தலாம் என உத்தரவிட்டனர். மேலும் சாத்தான்குளம் சம்பவம் போல் தமிழகத்தில் இனிமேல் எங்கும் நடக்கக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 24 மணிநேரத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை தமிழக காவல்துறை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியிடம் ஐகோர்ட் நீதிபதிகள் தொலைபேசி வாயிலாக பேசி வருகின்றனர். அப்போது அவருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறித்த அச்சத்தை நீதிபதிகள் போக்கினர்.

