'கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை உரிமையாக கோர முடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

'கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை உரிமையாக கோர முடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
'கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை உரிமையாக கோர முடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

வனப்பாதுகாவலராக இருந்த தந்தை, பணியில் இருக்கும்போது உயிரிழந்ததால் கருணை அடிப்படையிலான பணியை வழங்கக்கோரி, மகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

தேனியை சேர்ந்த பேபி ஷாலினி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது தந்தை பாண்டி, ஆண்டிபட்டி சரகத்துக்கு உட்பட்ட வனப் பகுதியில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார். 1999ஆம் ஆண்டு பணியில் இருந்த போது உயிரிழந்ததால், கருணை அடிப்படையில் பணி வழங்க கோரி 2006ஆம் ஆண்டு விண்ணப்பித்தேன். ஆனால் அப்போது 18 வயதை பூர்த்தி ஆகவில்லை என மனுவை நிராகரித்து விட்டனர். பிறகு 2019ஆம் ஆண்டு மீண்டும் கருணை அடிப்படையில் பணி வழங்கக்கோரி  விண்ணப்பித்திருந்தேன். அதனை வனத்துறை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். இதனை எதிர்த்து கருணை அடிப்படையில் பணி வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தேன்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி 20 ஆண்டுகள் கழித்து கருணை அடிப்படையில் பணி வழங்க தாமதமாக விண்ணப்பித்துள்ளதாகக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து கருணை அடிப்படையில் எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி அமர்வு, "கருணை அடிப்படையில் பணி கோருபவர்கள், பணியில் இருந்தவர் இறந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டுமே தவிர வயது வரம்பு பூர்த்தி ஆகியதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் அல்ல. ஆகவே மனுதாரர் தான் வயதுவரம்பு பூர்த்தி ஆனதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்துள்ளதாக கூறுவதை ஏற்க இயலாது.

மேலும் கருணை அடிப்படையிலான பணி என்பது இறந்தவரின் குடும்பத்தின் உடனடி பொருளாதாரத் தீர்வுக்காகத்தான். இதை வெகு காலம் காத்திருப்பில் வைக்க இயலாது. பலரும் கருணை அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதனால் அரசு அதில் சீனியாரிட்டி முறையை பின்பற்றி பணி வழங்கி வருகிறது. கருணை அடிப்படையிலான பணியை, தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் எனக்கோருவது அத்திட்டத்திற்கு எதிரானது. அதனை உரிமையாக கோர முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிக்க: ‘உங்க எல்லை பிரச்னைய அப்புறம் வச்சுக்கோங்க; முதல்ல யானையை காப்பாத்துங்க’- மக்கள் கோரிக்கை

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com