“உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே தலாக் சொல்ல வேண்டும்” - நீதிபதி

“உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே தலாக் சொல்ல வேண்டும்” - நீதிபதி
“உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே தலாக் சொல்ல வேண்டும்” - நீதிபதி

கணவர், மனைவி இடையே சமரசம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளாமல் வழங்கப்பட்ட முத்தலாக் நோட்டீஸை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தேனியைச் சேர்ந்தவர் நசீமா. இவரது கணவர் மைதீன் பாட்சா. இவர்களுக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு கணவர் வீட்டினர் வரதட்சணை கொடுமை செய்ததாக நசீமா போடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது கணவர் வீட்டினர் தொந்தரவு அளிக்கமாட்டோம் என உறுதியளித்ததால் வழக்கை நசீமா திரும்ப பெற்றதாக தெரிகிறது. 

இந்நிலையில் மைதீன் பாட்சா 8.4.2010-ல் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி, தான் 8.3.2010-ல் முத்தலாக் நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதை உறுதி செய்வதாகவும் தெரிவித்தார். இதற்கு எதிராக தேனி சார்பு நீதிமன்றத்தில் நசீமா வழக்கு தொடர்ந்தார். அதில் முத்தலாக் வழங்கியது செல்லாது என தேனி சார்பு நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மைதீன் பாட்சா தேனி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நசீமா முத்தலாக் நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடரவில்லை எனவும், வழக்கறிஞர் நோட்டீஸை எதிர்த்து தான் வழக்கு தொடர்ந்துள்ளார் எனவும் கூறி தேனி சார்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து  கடந்த 2015ல் உத்தரவிட்டது.

இதை ரத்து செய்யக்கோரி நசீமா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி நிஷாபானு, “திருக்குரானில் உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே தலாக் சொல்லப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. தலாக் வழங்குவதற்கு முன்பு கணவர் குடும்பத்தில் ஒருவரும், மனைவி குடும்பத்தில் ஒருவரும் கணவன், மனைவி இடையே சமரசம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சி தோல்வி அடைந்தால் மட்டுமே தலாக் வழங்க முடியும். இந்த முறையை பின்பற்றி வழங்கப்படும் தலாக்கே சரியானதாக இருக்கும். இந்த வழக்கில் முத்தலாக் வழங்குவதற்கு முன்பு கணவர், மனைவி இடையே சமரசம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டதாக தெரியவில்லை. இதிலிருந்து சட்டப்படி முத்தலாக் வழங்கியதாக கருத முடியாது” எனத் தெரிவித்தார். மேலும் முத்தலாக் நோட்டீஸை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com