ஆன்லைன் பத்திரப்பதிவில் சீனியர்களே இல்லை! சூடுபிடித்த வாதம்!
ஆன்லைன் பத்திரப்பதிவை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகாசியைச் சேர்ந்த சங்கரலிங்கம், ஆன்லைன் பத்திரப்பதிவு தொடர்பாக மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “பதிவுத்துறை பணியாளர்களுக்கு ஆன்லைன் பதிவுக்காக பயன்படுத்தப்படும் மென்பொருளை கையாள்வதற்கு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும். பிறகு ஆன்லைன் பதிவு முறையை மேற்கொள்ளவும், அதுவரை ஆன்லைன் பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தேன்.
இதை விசாரித்த நீதிமன்றம், பத்திரவுப் பதிவு அதிகாரிகள் தங்கள் பணியை எழுத்தாளர்களிடமோ, வேறு நபர்களிடமோ ஒப்படைக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே பதிவுத்துறை தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறையில் உள்ள நிலையில், அதனை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பியது. இதற்கு விளக்களித்த பத்திரப்பதிவு தரப்பு, ஐஐடி பேராசிரியர் குழுவின் ஆலோசனையும் பெறப்பட்டு வருகிறது என தெரிவித்தது. இதையேற்ற நீதிபதிகள், ஆன்லைன் பத்திரப்பதிவை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.